கோவிலில் படுத்திருந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை; திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் கோவிலில் படுத்து தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் கோவிலில் படுத்து தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே சில்வார்பட்டி கதிரையன்குளத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சிவக்குமார் (வயது 22). பட்டதாரி. இவர் இரவில் தனது ஊரில் உள்ள கோவிலில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி, 3-ந்தேதி இரவு சிவக்குமார் அந்த கோவிலில் படுத்திருந்தார்.
நள்ளிரவு 2 மணி அளவில் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரகுபதி (29) அங்கு வந்தார். அப்போது அவர், சிவக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து அரிவாளுடன் ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ரகுபதி, அங்கு போலீசாரிடம் நடந்ததை கூறி சரணடைந்தார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தான் சிவக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் தெரியவந்தது. இதனால் கொலை நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
பின்னர் சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுபதியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்விரோதம்
கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் அண்ணன் முத்துக்குமார் (30). இவர் சில்வார்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கும், ரகுபதிக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஊர் பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர்.
இதற்கிடையே 3-ந்தேதி இரவு 10 அளவில் சிவக்குமார் அங்குள்ள கோவிலில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரகுபதி, முத்துக்குமார் தகராறு செய்தது குறித்து சிவக்குமாரிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ரகுபதி சென்றுவிட்டார். இந்தநிலையில் நள்ளிரவில் மீண்டும் சிவக்குமார் படுத்திருந்த கோவிலுக்கு ரகுபதி அரிவாளுடன் வந்தார். அப்போது கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த சிவக்குமாரை கண்இமைக்கும் நேரத்தில் ரகுபதி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
நள்ளிரவில் கோவிலில் படுத்திருந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரேநாளில் 3 பேர் கொலை
சிவக்குமார் கொலையுடன் நேற்று முன்தினம் ஒரேநாளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்துள்ளன. பழனி அருகே புளியமரத்துசெட் பகுதியில் சொத்து தகராறில் தம்பியை அண்ணன் வெட்டிக்கொலை செய்தார். அதேபோல் திண்டுக்கல் முருகபவனத்தில் வீட்டிற்குள் புகுந்து பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த 3 கொலை சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.