ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காடு பட்டிபாடி கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவரது மனைவி தேவி (வயது37). இவர் நேற்று மாலை ஏற்காடு டவுன் பகுதிக்கு வந்து விட்டு தனது ஊரான பட்டி பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்
தேவி நடுவூர் கிராமம் அருகே வந்ததும் திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை அவரை முட்டி கீழே தள்ளியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவிக்கு காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்து சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர், அப்பகுதியினர் தேவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.