இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்

சதுரங்கப்பட்டினம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-07-30 07:51 GMT

சதுரங்கப்பட்டினம்,

சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 29). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் குப்பத்தை சேர்ந்த ஹரினி (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. ஆடி மாதம் என்பதால் ஹரினி சென்னையில் இருந்து தாய் வீடான மெய்யூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டார்.

ஹரினியின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குன்றி இறந்து விட்டார். அவரது தந்தை ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து சென்ற ரவி் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரினி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் மெய்யூர் குப்பத்திற்கு விரைந்து சென்று ஹரினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரினி ஏன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என விசாரித்து வருகின்றனர். ஹரினிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகுவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்