மல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை முயற்சி-கள்ளக்காதலன் கைது

மல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-28 20:57 GMT

பனமரத்துப்பட்டி:

ரகசிய உறவு

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அக்கரைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 23). இவர் கணவரை பிரிந்து தன்னுடைய 3 வயது ஆண் குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கலைச்செல்விக்கும், பாலம்பட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கோபால் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே ரகசிய உறவாக மாறியது.

கலைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபால் நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் கலைச்செல்வி கடந்த சில மாதங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோபாலை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் கோபால் அதனை தட்டிக் கழித்து வந்துள்ளார்.

திருமணத்துக்கு மறுப்பு

சம்பவத்தன்று இரவு கோபால் தனது தோட்டத்து வீட்டில் இருந்துள்ளார. அங்கு சென்ற கலைச்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபாலிடம் வற்புறுத்தி உள்ளார். கோபால் மறுக்கவே கலைச்செல்வி அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் கோபால் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதில் மனம் உடைந்த கலைச்செல்வி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கலைச்செல்விக்கு தீவிர சிகிச்சை

ஆஸ்பத்திரியில் கலைச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கலைச்செல்வி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக கோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்