முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்
முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். இயக்குனர்கள் பிரசாந்த், கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கல்லூரி முதல்வர் கோபிநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மாணவர்களாகிய உங்களை பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளனர். நீங்கள் கல்லூரியில் நன்றாக படிக்க வேண்டும். கற்ற கல்வி தான் உங்களுக்கு கை கொடுக்கும். கல்வி கற்றால் செல்லும் இடமெல்லாம் உயரலாம். பதவி கூட காணாமல் போய்விடும். ஆனால் கல்வி மட்டும் என்றும் உங்களுடனே இருக்கும். ஒரு தலைமுறை இல்லை பல தலைமுறைகளும் சிறந்து விளங்க நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள் குறைவாக இருக்கும். அதில் படிக்க இடம் கிடைக்காது. ஆனால் இப்போது கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதனால் உங்களுக்கு சுலபமாக இடம் கிடைத்து விடுகிறது. இந்த வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வி அடைந்தால் கவலைப்படக்கூடாது. விளையாட்டு வீரர்கள் தோல்வி அடைந்தால் அதை எதிர்கொள்வார்கள். அது போல நீங்களும் தோல்வியை வெற்றிக்கு முதல்படி என நினைத்து நன்றாக படிக்க வேண்டும். படிக்கும்போது தேர்வுக்கு என படிக்காதீர்கள். புரிந்து கொண்டு படியுங்கள். உங்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்துங்கள். முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார்.
கவுரவ விருந்தினராக சதீஷ் சந்திரன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் சரவணன், அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் சாண்டில்யன் நன்றி கூறினார்.