கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பிரிவில் சென்று ஆதார் எண் அளிக்க வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.
கல்வி உதவித்தொகை இணையதளம், புதுப்பித்தலுக்கு இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம். தகுதியுடைய மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.