டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-09 17:57 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாப்செட்கோ) திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்