மழை குறைந்தாலும் மகசூலை அள்ளித்தந்த குதிரைவாலி

கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரத்தில்மழை குறைந்தாலும் மகசூலை அள்ளித்தந்த குதிரைவாலி விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-02-05 18:45 GMT

கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரங்களில் மழை குறைந்தாலும், குதிரைவாலி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுதானியங்கள்

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி வட்டாரங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் ரக விதைகளை வழங்கியும், சாகுபடி உயர் தொழில்நுட்ப பயிற்சிகளையும் வேளாண்மைத்துறையினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சிறுதானியமான குதிரைவாலி பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு வந்தது. இதனால் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் மல்லுச்சாமி, மதுரை-1 ரக குதிரைவாலி சாகுபடி செய்து உள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சொ.பழனிவேலாயுதம், உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

அப்போது விவசாயிகள் கூறுகையில், நடப்பு ஆண்டில் பருவமழை குறைவாக பெய்து இருந்தாலும், குதிரைவாலி நன்கு வறட்சியை தாக்கி வளர்ந்து உள்ளது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் நிலையில் உள்ளது. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் எதுவும் இல்லை. குறைந்த சாகுபடி காலம் உடையதாகவும் (90-95 நாட்கள்), இடுபொருள் செலவு குறைவாக உள்ளது. மண்வளம் குறைவாக இருந்த போதும் கூட நல்லமகசூல் தரும் குணங்களுடைய பயிராக குதிரைவாலி போன்ற சிறுதானிய வகைகள் உள்ளது. குதிரைவாலி பயிர் மானாவாரி பயிராகவும், வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடிய பயிராகவும், அதிக விற்பனை வாய்ப்புகள் உள்ள பயிராகவும் உள்ளது. இதனால் குதிரைவாலி சாகுபடி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

வருமானம்

இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் கூறும் போது, நெல், கோதுமையை விட கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய பயிர்களில் அதிகளவு இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. வளரும் இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் ஏற்றதாக சிறுதானிய உணவுகள் உள்ளன. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை அனைவரும் சிறுதானியங்களை பயன்படுத்தலாம். விவசாயிகள் சிறுதானியப் பயிர்களை அதிகம் பயிரிட்டு நல்ல வருமானம் பெறலாம். இதற்கு தேவையான சிறுதானிய விதைகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்