இலைப்பேன்கள் தாக்குதலால் தேயிலைச் செடிகளில் மகசூல் பாதிப்பு

இலைப்பேன்கள் தாக்குதலால் தேயிலைச் செடிகளில் மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-12-20 18:45 GMT

வால்பாறை

இலைப்பேன்கள் தாக்குதலால் தேயிலைச் செடிகளில் மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இலைப்பேன்கள் தாக்குதல்

வால்பாறை பகுதியில் நிலவக்கூடிய காலசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு நோய்கள், பூச்சிகள் தாக்கி வருகிறது. தற்போது வால்பாறை பகுதியில் பகலில் கடுமையான வெப்பமும் இரவில் குளிர் மற்றும் ஈரப்பதத்துடன் கூடிய பனிப்பொழிவும் கலந்த காலசூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகளின் உற்பத்தி சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அதே சமயம் இந்த காலச்சூழலில் தேயிலை செடிகளை தாக்கி அழிக்கும் இலைப்பேன் மற்றும் தேயிலை கொசு தாக்குதல் அதிகரிக்க தொடங்கி விட்டது. இலைப்பேன் தேயிலை செடியில் உள்ள முதிர்ந்த இலைகளை தாக்கி கருகிவிடச் செய்வதால் தேயிலை இலை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மகசூல் பாதிப்பு

அதேபோல் தேயிலை கொசுவும் டீத்தூள் தயாரிப்பதற்கு பயன்படக்கூடிய இளம் தளிர் இலைகளை தாக்கி அதன் சாறை உறிஞ்சி இளம் தளிர் இலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறது. இதனால் இளம் தளிர் இலைகளில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு இலைகள் சுருண்டு பாதிக்கப்பட்டு விடுகிறது.

வால்பாறை பகுதியில் தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது .இந்த இலைப்பேன் மற்றும் தேயிலை கொசுவை கட்டுப்படுத்த உபாசி தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த சிறப்பு பசையை மஞ்சள் நிற பதாகைகளில் தடவி தேயிலை தோட்டத்தில் ஆங்காங்கே வைத்துள்ளனர்.

முழுவீச்சில் கட்டுப்படுத்தும் பணி

தேயிலை கொசு மற்றும் இலைப்பேன் மஞ்சள் நிறத்தினால் கவரப்பட்டு தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பதாகைகளில் வந்து ஒட்டிக்கொள்கின்றன. அதனால் தேயிலை செடிகளை கொசுக்கள், இலைப்பேன் ஆகியவை தாக்குவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர்கள் தேயிலை கொசு, இலைப்பேன் ஆகியவற்றால் தாக்கப்பட்ட தேயிலை தோட்டத்தில் ஆங்காங்கே மஞ்சள் நிற பதாகைகளை வைத்து இலைப்பேன் மற்றும் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்