"ஏற்காடு எங்கள் பெருமை" விழிப்புணர்வு நடைபயணம்-கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
"ஏற்காடு எங்கள் பெருமை" என்ற விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழிப்புணர்வு நடைபயணம்
சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் "ஏற்காடு எங்கள் பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நடைபயணத்தில் விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள், சிறுமிகள், முதியோர் என 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் நடந்து சென்றனர்.
அவர்களுடன் கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகளும் சென்றனர். ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கிய நடைப்பயணம் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள 60 அடி பாலம் வரை சென்று மீண்டும் அடிவாரத்துக்கு வந்தடைந்தது. மொத்தம் 14 கிலோ மீட்டர் ஆகும். பின்னர் நடைபயணத்தை முழுமையாக முடித்தவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உறுதிமொழி ஏற்பு
முன்னதாக பச்சையம் காப்போம், பசுமை வளர்ப்போம், காடுகள் மனித குலத்தின் வேர்கள் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கபட்டது. நடைபயணத்தின் போது கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் வீசும் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை பசுமையாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வகத்தின் சார்பில் "ஏற்காடு எங்கள் பெருமை" என்ற விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.
இனிமையான நினைவு
காலை உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடைப்பயணம் அமைவதோடு, நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிமையான நினைவுகளாக விளங்குகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங் ரவி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, மாவட்ட மாசுகட்டுப்பாட்டுவாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில்விநாயகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.