பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பழனி பஸ் நிலையத்தில் மஞ்சப்பை ஏ.டி.எம்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பழனி பஸ் நிலையத்தில் மஞ்சப்பை ஏ.டி.எம். அமைக்கப்பட உள்ளது.

Update: 2023-01-14 17:34 GMT

பழனியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி அதிகாரிகளும் அவ்வபோது கடை, வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை செய்கின்றனர். அதோடு பிளாஸ்டிக் தடுப்பு குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து பொதுமக்களும் துணிப்பை பயன்பாட்டில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பொதுஇடங்களுக்கு வரும் மக்களுக்கு எளிதில் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய நகராட்சி முடிவு செய்தது. அதன்படி, பழனி வ.உ.சி. பஸ்நிலையத்தில் மஞ்சப்பை ஏ.டி.எம். மையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பழனி பஸ்நிலையத்தில் மஞ்சப்பை ஏ.டி.எம். மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏ.டி.எம். எந்திரம் போன்று இதிலும் பணம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். இதற்கான எந்திரம் விரைவில் பஸ்நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட உள்ளது. மஞ்சப்பைக்கான தொகை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படும். பழனியை பொறுத்தவரை வெளியூர் பக்தர்களே அதிகம் வருகின்றனர். இவர்கள் இனிப்பு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை வாங்கிய பின்பு அவற்றை வைத்து கொண்டு செல்ல பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை நாடுகின்றனர். இந்த மஞ்சப்பை ஏ.டி.எம். மையம் வந்தால் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறையும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்