திருப்பூரில் 184 அரங்குகளுடன் யார்னெக்ஸ் ஜவுளி தொழில்துறை கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
ஜவுளி தொழில்துறை கண்காட்சி
திருப்பூரில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா மற்றும் டைகெம் ஜவுளி தொழில்துறை கண்காட்சி நேற்று காலை திருப்பூர் பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் தொடங்கியது. கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இணை செயலாளர் குமார் துரைசாமி, நூல் வியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். யார்னெக்ஸ் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
கண்காட்சியில் பருத்தி மற்றும் செயற்கை நூலிழைகள், துணிகள், ட்ரிம்கள், ஆடையலங்கார பொருட்கள், சாயப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள், சப்ளையர்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் என மொத்தம் 184 அரங்குகள் இடம்பெற்றன.
வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்
புதுமையான தயாரிப்புகள், நவநாகரீக மற்றும் சோர்சிங் ஆகியவற்றின் களமாக யார்னெக்ஸ் கண்காட்சி அரங்குகள் அமைந்துள்ளன. இது வினியோக சங்கிலி தொடரில் உள்ள இடைவெளியை குறைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் துணிகள் மற்றும் பொருட்கள் சப்ளையர்களுக்கு நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் டெக்ஸ் இந்தியா கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாயப்பொருட்கள், ரசாயன பொருட்கள் தயாரிப்பு மற்றும் வினியோக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் தற்போது நவீன பொருட்கள், நவீன உற்பத்தி முறைகள், இந்த துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ளவும், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் டைகெம் கண்காட்சி அரங்குகள் உதவுகிறது.
செயற்கை நூலிழை ஆடைகள்
நூலிழைகளில் இயற்கை ரகத்தில் பருத்தி, கம்பளி, பட்டு, பிளாக்ஸ், ராமி, செயற்கை ரகத்தில் மறுசுழற்சி பாலியெஸ்டர், சிந்தடிக், எலாஸ்டிக், பேன்சி இடம்பெற்றுள்ளன. அதிக அளவில் செயற்கை நூலிழைகள், ஆடைகள் அரங்குகளில் இடம்பெற்றன. நிட்டிங், எம்ப்ராய்டரி, கிரே, இம்போர்டட், டெனிம், பாட்டம் வெயிட், பிரிண்டட், பிராசஸ்டு, சில்க், வெல்வெட், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட சர்ட் ரகங்கள், பட்டன்கள், ஹேங்கர்கள், ஜிப்பர்கள், இண்டர் லைனிங், லேபிள்கள், லேஸ்கள், ஸ்டோன்ஸ், ஸ்டட்ஸ், தையல், எம்ப்ராய்டரி ஆகியவை இடம்பெற்றன. சாயமேற்றுதல், பிரிண்டிங், பேப்ரிக் பிராசசிங் அரங்குகளும் உள்ளன.
பெங்களூரு, அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, கொச்சின், கோவை, திண்டுக்கல், ஈரோடு, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, சூரத், புனே, தானே ஆகிய நகரங்களில் இருந்தும், ஆஸ்திரியா, சீனா, எகிப்து, ஹாங்காங், அமெரிக்கா, போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
நாளை வரை நடக்கிறது
ஏஜெண்டுகள், ஆடைகள் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைவடிவமைப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். நேற்று காலை முதல் கண்காட்சி அரங்கை பார்வையிட திரளானோர் வந்தனர். இந்த கண்காட்சி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.