விவசாயிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்கடலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

விவசாயிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-28 18:45 GMT


கடலூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50), விவசாயி. இவர் தனது கழுத்தில் ஏற்பட்ட 'லிபோமா'வை அகற்ற, கடந்த 5.7.2021 அன்று கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 6.7.2021 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனை செய்த போது, செரிமான அமைப்பில் இருந்து மார்பு குழிக்கு திரவ கொழுப்பை கொண்டு செல்லும் குழாய் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் துண்டிக்கப்பட்ட குழாயை சரிசெய்வதற்காக இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதற்கிடையே முதல் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அலட்சியமாக இருந்ததாகவும், அறுவை சிகிச்சையின் போது சரியான இடத்தில் அறுவை சிகிச்சை செய்யாததால் மார்பு குழாய் துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனிசாமி, கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று அவர்கள் தீர்ப்பு கூறினர். இதில், கழுத்தில் உள்ள லிபோமாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் போது டாக்டருக்கு ஏற்பட்ட கவனகுறைவால் தவறான சிகிச்சை அளித்ததாகவும், அதனால் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக் காக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்