தமிழகத்தில் 45 மையங்களில் நடைபெற்ற 621 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு

தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 621 பணியிடங்களுக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

Update: 2023-08-27 00:00 GMT

621 காலிப்பணி

தமிழக போலீஸ் துறையில் 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 5-ந்தேதி வெளியிட்டது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் இணையதளம் மூலம் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் 469 ஆண் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 804 பேரும், 152 பெண் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கு 40 ஆயிரத்து 885 பேரும் மற்றும் 33 திருநங்கைகளும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்தனர். போலீஸ் துறை சேர்ந்த 13 ஆயிரத்து 609 ஆண் போலீசாரும், 2 ஆயிரத்து 401 பெண் போலீசாரும், ஒரு திருநங்கை போலீஸ்காரரும் என 16 ஆயிரத்து 11 பேர் விண்ணப்பம் செய்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. பொது பிரிவினருக்கு 33 மையங்களும், போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கு 12 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது பிரிவினருக்கு நேற்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை பொது பிரிவினருடன் சேர்ந்து போலீஸ் துறையை சேர்ந்தவர்களும் எழுதினார்கள்.

இன்றும் தேர்வு நடக்கிறது

தமிழகத்தில் நேற்று பகலில் நடந்த தேர்வை 1 லட்சத்து 43 ஆயிரத்து 597 பேர் எழுதினார்கள். நுழைவுச்சீட்டு பெற்றவர்களில் 81.07 சதவீதம் பேர் இந்த தேர்வை எழுதினர். மாலையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்றதால் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 375 ஆனது.

சென்னையில் 6 மையங்களில் நடைபெற்ற எழுத்து தேர்வை 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். சென்னை அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மட்டும் 1,500 பேர் இந்த தேர்வில் பங்கேற்றார்கள்.

தேர்வர்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். செல்போன், மின் சாதனங்களை மையங்களுக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பூ அணிந்து வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 'ஹால்' டிக்கெட் வைத்திருந்த தேர்வர்கள் மட்டும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு கண்காணிப்பு பணியில் போலீஸ் உயரதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தேர்வு மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.

போலீஸ்துறையை சேர்ந்தவர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்