விழுப்புரத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு:764 போலீஸ்காரர்கள் எழுதினர்
விழுப்புரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை நேற்று 764 போலீஸ்காரர்கள் எழுதினர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 749 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (621 ஆண்கள், 128 பெண்கள்) காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் காலையில் நடந்த பொதுஅறிவு தேர்வை நேரடி தேர்வர்கள் எழுதினார்கள். இதை தொடர்ந்து மதியம் நடந்த தமிழ் தேர்வை நேரடி தேர்வர்கள் மற்றும் காவல்துறையில் பணி செய்து வருபவர்களில் 45 வயதுக்கு கீழ் உள்ள 5 வருடம் பணி நிறைவு செய்தவர்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.
150 பேர் எழுதவில்லை
இதில் நேற்று காலை போலீஸ்துறையை சேர்ந்தவர்களுக்கு பொதுஅறிவு தேர்வு (முதன்மை எழுத்துதேர்வு) நேற்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மையத்தில் மட்டும் நடைபெற்றது.
இத்தேர்வுக்கு காவல் துறையில் இருந்து 756 ஆண்களும், 158 பெண்கள் உள்பட மொத்தம் 914 பேர் விண்ணப்பித்தனர்.
அதில், 150 பேர் தேர்வெழுத வரவில்லை. 764 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை கண்காணிக்கும் பாதுகாப்பு பணிகளில் 200 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, நேர்காணல் போன்ற தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.