மகாதீப திருவிழாவுக்கு செல்லும் குழந்தைகளின் கையில் பெயர், செல்போன் எண்ணுடன் பட்டை அணிவிப்பு

மகாதீப திருவிழாவுக்கு செல்லும் குழந்தைகள்காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க கையில் பெயர், செல்போன் எண்ணுடன் பட்டை அணிவிக்கப்பட்டது.

Update: 2022-12-06 14:18 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நடந்தது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுடைய மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை காணவும், பின்னர் மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றனர். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வருகை தந்தனர். பெற்றோருடன் மகாதீப திருவிழாவை காண பஸ்சில் பயணம் செய்த குழந்தைகளின் கையில் போலீசார் பட்டை (டேக்) ஒன்றை கட்டினர். அதில், குழந்தையின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், ஊர் பெயர் ஆகியவை எழுதப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு சென்று சொந்த ஊருக்கு திரும்பி வரும்வரை அதனை கழற்ற வேண்டாம் என்று குழந்தை மற்றும் பொற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தினர். மகாதீப திருவிழா கூட்டத்தில் எதிர்பாராத விதமாக குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடித்து உடனடியாக பெற்றோருடன் சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்