மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப் பயங்கரவாதத்தை ஏவுவதா? - சீமான் கண்டனம்

பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப் பயங்கரவாதத்தை ஏவுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-29 01:28 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினருமான இபிரிஜ் பூஷன் மீதான வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக டெல்லி, ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், அதன் நீட்சியாக இன்றைய தினம் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி, பேரணியாக செய்ய முயன்றபோது அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரச வன்முறையை ஏவிவிட்ட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

'பாரத மாதாவுக்கு ஜே' என நாளும் முழக்கமிடும் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒப்பற்றப் புதல்விகளான மல்யுத்த வீராங்கனைகளது நீதிகேட்கும் அறப்போராட்டத்திற்கு செவிசாய்க்க மறுத்து, அவர்கள் மீது அரசப் பயங்கரவாதத்தைப் பாய்ச்சியிருப்பது வெட்கக்கேடானது. நாட்டுக்காகப் பன்னாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வாரிக்குவித்த வீரர், வீராங்கனைகளை உலக நாடுகள் யாவும் தங்கள் நாட்டின் செல்வமென நினைத்துக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய நாட்டில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதும், ஆளும் அரசாலேயே அலட்சியம் செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டு வருவதும், அடக்கி ஒடுக்கப்படுவதுமான கொடும் நிகழ்வுகள் உலகரங்கில் இந்நாட்டைத் தலைகுனியச் செய்யும் இழிசெயலாகும்.

"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், போதையிலும் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத அரசும், கொடுங்கோன்மை ஆட்சியும் வீழ்ந்தொழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்