முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Update: 2023-01-21 14:40 GMT

தை அமாவாசை

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை விசேஷ நாளாகும். அன்றைய தினம் இந்துக்கள் தங்களின் முன்னோர்களின் ஆசி கிடைக்க தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக நதி, குளக்கரை ஓரங்களில் தர்ப்பணம் செய்து நதியில் புனிதநீராடி வழிபட்டு ஆசி கிடைக்க வேண்டுகின்றனர்.

அதன்படி தை அமாவாசை நாளான நேற்று திண்டுக்கல்லில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி திண்டுக்கல் கோபால சமுத்திரம் மற்றும் ஆர்.எம்.காலனியில் உள்ள ஈமக்கிரியை செய்யும் இடம் ஆகியவற்றில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன.

கற்பூரம் ஏற்றி வழிபாடு

காலை 6 மணியளவில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் அங்கு வரத்தொடங்கினர். இவ்வாறு வந்தவர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து வாழை இலையில் பச்சரிசி, காய்கறிகள், தேங்காய், பழம் உள்பட தர்ப்பணப் பொருட்களை எடுத்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூற அதை உடன் சொல்லி எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பிறகு கற்பூரம் ஏற்றி இறந்த தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

பின்னர் அங்கிருந்து சிறிதளவு பச்சரிசியை வீட்டுக்கு எடுத்து சென்று சமையலில் சேர்த்து படையலிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். பிறகு அன்னதானம் செய்தும், ஒரு சிலர் பசுவுக்கு அகத்திக்கீரையும் வாங்கி உண்ண கொடுத்தனர்.

பழனி, நிலக்கோட்டை

தை அமாவாசையையொட்டி பழனி சண்முகநதிக்கரையில் தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே நேற்று ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றின் கரையோர பகுதியில் வாழை இலையில் தேங்காய், பழம், பச்சரிசி, காய்கறி, பூக்கள், அரிசி, எள் ஆகியவற்றை படைத்து புரோகிதர் மந்திரங்கள் கூற தர்ப்பணம் செய்தனர். பின்னர் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்படுகையில் தை அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்தனர்.

தை அமாவாசை மற்றும் சனிக்கிழமை இணைந்து வந்ததால் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தை அமாவாசையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்