சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைமாவட்டத்தில் 1,500 சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-18 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூைஜ நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. தர்மபுரி நகரில் எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை, உபகார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு தெருவில் உள்ள செல்வகணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நல்லகுட்லஅள்ளி

பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 மதத்தினர் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி, பள்ளிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இதையொட்டி அந்தபகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிலைகளுக்கு பூஜை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தர்மபுரி சித்த வீரப்ப செட்டி தெருவில் கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அரசின் விதிமுறைக்குட்பட்டு விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க வேண்டும் என்று காவல்துறை நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்