தேய்ந்துபோன டயர்கள்... கிழிந்துபோன இருக்கைகள்...

கூடலூரில் தேய்ந்துபோன டயர்கள், கிழிந்துபோன இருக்கைகள் என ஓடிக்கொண்டிருக்கும் அரசு பஸ்களின் பரிதாப நிலையால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-05-30 15:14 GMT

கூடலூர், மே.31-

கூடலூரில் தேய்ந்துபோன டயர்கள், கிழிந்துபோன இருக்கைகள் என ஓடிக்கொண்டிருக்கும் அரசு பஸ்களின் பரிதாப நிலையால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

அரசு பஸ்கள்

குடும்பத்தோடு ஊருக்கு புறப்பட்டு செல்வதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம். பஸ்சை கண்டவுடன் ஓடிச்சென்று இருக்கையில் இடம் பிடிப்பது தனி சுகம். இயற்கை அன்னையின் அரவணைப்பில் உள்ள கூடலூர் பகுதியில் பஸ் போக்குவரத்து வசதி இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனால் பஸ்கள் செல்லாத ஊர்களுக்கு ஆட்டோக்கள், ஜீப்புகள் பயன்படுத்தப்படுகிறது.

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு, மசினகுடி உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் மிகவும் பழுதடைந்த மற்றும் பராமரிப்பு இல்லாத பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக மேற்கூரைகள் மட்டும் பழுதடைந்து காணப்படும். இதனால் மழைக்காலத்தில் பஸ்சுக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

கிழிந்த இருக்கைகள்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரசு பஸ்களின் டயர்கள் மிகவும் தேய்ந்து வழுக்கையாக மாறி விட்டது. அதற்கு மாற்றாக புதிய டயர்கள் வழங்கப்படாததால், எந்த வகையிலும் பயனற்ற உதிரி பாகங்களை பயன்படுத்தய வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் அரசு பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் தினமும் நின்று விடுகிறது. இதேபோல் பயணிகள் இருக்கைகளும் கிழிந்து தொங்குகிறது. இதனால் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகள், பயணிகளின் உடலை பதம் பார்த்து விடுகிறது. இதனால் அவதியடைந்த பயணிகள் பலர் சமூக வலைதளங்களில் அரசு பஸ்களின் பரிதாப நிலை குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது வைரலாக பரவி வருகிறது.

சமவெளி பகுதிகளில் பல ஆண்டுகளாக ஓடி காலாவதியான பஸ்களை கூடலூர் பகுதிக்கு கொண்டு வந்து இயக்குவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

மலைப்பிரதேசத்தில் தேய்ந்து போன டயர்கள் உள்ள அரசு பஸ்கள் பிரேக் பிடித்தாலும், சிறிது அடி சென்ற பின்னர் தான் நிற்கிறது. எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அரசு பஸ்களை முறையாக பராமரித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்