மேட்டுப்பாளையம் நகராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Update: 2022-10-12 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

குடிநீர் வினியோகம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட உட்பட்ட 31-வது வார்டில் சுமார் 800 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் கே.கே. நகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதி நகர், கே.கே.நகர் முதல் தெருவில் கட்டப்பட்ட சிறுபாலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இடிந்து பழுது அடைந்து கீழே இறங்கி காணப்பட்டது. இதனால் சிறுபாலத்தின் அடியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் பாலத்தின் வழியே சாக்கடை கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாமல் ரோட்டில் குப்பை கூளங்களுடன் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழைநீர் செல்ல வழி இல்லாததால் ரோட்டோரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துதேங்கி நிற்கிறது மேலும் கோவிலை யொட்டியுள்ள கடைகளுக்கு முன்புறம் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு

சிறு பாலத்தின் அடியே குடிநீர் குழாயும் செல்வதால் குடிநீரில் புழுவோடு சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. கடந்த சில தினங்களாக 31-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்களும் சாக்கடை கழிவும் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இதன் காரணமாக நோய் பரவக் கூடிய அபாய சூழ்நிலையும் காணப்படுகிறது இதுகுறித்து வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி சவுந்தர்ராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று புழுவோடு சாக்கடை கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்துக்கொண்டு நகராட்சி அலுவலகம் சென்றனர். அங்கு நகரமன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து எடுத்துக் கூறி பாட்டிலில் கொண்டு சென்ற புழுவுடன் கூடிய குடிநீரையும் காட்டினார்கள். இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை என்று மக்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்