உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

கடலூரில், உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-31 19:40 GMT

கடலூர், 

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் " புகையிலையை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்று கலெக்டர் தலைமையில் அனைவராலும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், பயிற்சி செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பேரணியாக பாரதி சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக அரசு ஆஸ்பத்திரியை சென்றடைந்தனர்.

கோஷங்கள்

பேரணியில், பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, புகையிலை பொருட்களை வாங்கவோ, விற்கவோ தடை செய்யப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.

பேரணியில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அபிநயா, அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப் பாளர் சாய்லீலா மற்றும் டாக்டர்கள், பயிற்சி செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.52,400 அபராதம்

முன்னதாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கடந்த ஏப்ரல் 2021-ம் ஆண்டு முதல் மார்ச் 2022 வரையுள்ள நிதியாண்டில் கடலூர் மாவட்ட அளவிலான புகையிலை தடுக்கும் படையினர், புகையிலை கட்டுப் பாட்டு சட்ட விதியை மீறிய 372 பேரிடம் இருந்து ரூ.52 ஆயிரத்து 400 அபராதத்தொகையை வசூலித்துள்ளனர். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற விழிப்புணர்வு பலகை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்