உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரேநாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டி சாதனை..!
இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது.
சென்னை,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 100-க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 58 பொருட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.