சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக சிக்கன நாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வீட்டுக்கு ஒரு அஞ்சலக தொடர் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.;
உலக சிக்கன நாள்
உலக சிக்கன நாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின் வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. 'பணத்தை தண்ணீராய் செலவழித்தல்' என்ற உவமையில் இருந்து மாறுபட்டு, 'தண்ணீரை பணம் போல செலவழிக்கும்' கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது. அக்டோபர் 30-ந் தேதியை (இன்று) உலக சிக்கன நாளாக நம் நாடு கடைப்பிடிக்கிறது.
இன்று 'குறைந்தபட்ச தேவைகளுடனான வாழ்க்கை' என்கிற கருத்தியல் விரைவாக பரவி வருகிறது. ஒரு பொருளை, 'தேவையா?' என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது. விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்ச தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்து வைக்கிறார்கள்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு
பெறுகிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்பிற்கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்றவற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கை கல்வி, பராமரிப்பு, வரி போன்றவற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கிறார்களோ, அவர்களே வளமான வாழ்க்கையை வாழமுடியும்.
சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதை சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, வீட்டுக்கு ஓர் அஞ்சலகத்தொடர் சேமிப்பு கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பழனிவேல் தியாகராஜன்
இதேபோல நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் உலக சிக்கன நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.