உலக யானைகள் தினம்: உண்ணி செடிகளால் வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பம் - அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
சென்னை மெரினா கடற்கரையில் உண்ணி செடிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பத்தை வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.;
சென்னை,
உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில், உண்ணிச் செடிகள் என்று அழைக்கப்படும் அந்நிய களை தாவரங்களை கொண்டு தத்ரூபமாக கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
4 பெரிய யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள் என மொத்தம் 6 யானைகள் 2 குடும்பங்களாக காமராஜர் சாலையை நோக்கி கம்பீரமாக நிற்கின்றன. இதனை வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
யானைகள் வருகிற 16-ந்தேதி வரையிலும் அங்கு நிறுத்தப்பட உள்ளன. மெரினா கடற்கரைக்கு குடும்பத்தோடு வந்தவர்கள் யானைகளின் அருகே நின்று 'செல்பி' எடுத்துச் சென்றனர்.