உலக புத்தக தின விழா

பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

Update: 2023-04-24 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

புத்தக தானம்

உலக புத்தக தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி நூலகத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக மாணவர்களால் புத்தக தானம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பள்ளிக்கு கிடைத்தன. பின்னர் நடந்த விழாவில் புத்தகங்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் குழந்தைகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை தாங்களே தேர்வு செய்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை மைதானத்தில் அமர்ந்து வாசித்தனர். இதில் இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா கலந்துகொண்டு பேசினார். விழாவில் தமிழாசிரியர் பாலமுருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு

இதேபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் உலக புத்தக தின விழாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்க கொடுக்கப்பட்டது. வாசிப்பை நேசிப்போம் என்று வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பேசினார். மேலும் வீட்டில் செல்போன், டி.வி. பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து, விடுமுறை நாட்களில் புத்தகங்களை படித்தால் வாசிப்பு திறன் அதிகரிக்கும் என்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்