தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலையில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

Update: 2023-08-04 17:43 GMT


திருவண்ணாமலையில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

வேலைவாய்ப்பு முகாம்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், உயர் கல்வித்துறை, மருத்துவ பணிகள், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, மின்சார வாரியம், காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு போக்குத்துவரத்து கழகம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம், பொறியியல் கல்லூரி, அரசு கேபிள் நிறுவனம், ஆவின் பாலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்பட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் துறை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்பான முறையில் செய்யுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களில் தகுதிவாய்ந்த நபர்களை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையும் வகையில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

108 அவசர ஊர்தி

மாணவ, மாணவிகளுக்கு இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ள செய்ய வேண்டும். அவசர சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவுடன் முகாம் அமைக்க வேண்டும்.

108 அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் மின் துண்டிப்பு ஏற்படாமல் துறை அலுவலர்களை கொண்டு கவனித்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளை நேர்காணலுக்கு அழைத்து செல்ல ஏதுவாக சக்கர நாற்காலி போன்ற வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இணையதள வசதியுடன் கூடிய உதவி மையங்கள் அமைக்க வேண்டும். பணிநியமனம் பெற்றவர்களை விழா அரங்கில் அமரச் செய்தல், துண்டு பிரசுரங்கள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு, உதவி மையம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

சிறப்பான முறையில் விழா மேடை அமைக்கும் பணியினை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனகீர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்