ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.62½ லட்சத்தில் பணிகள்
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.62½ லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.;
ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தமிழக நீர்வள துறையின் மூலம் பெரம்பலூர் மருதையாறு வடிநில உப கோட்டத்தில் மேற்கொண்ட பணிகள் குறித்து மத்திய அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணைச்செயலாளர் ஜி.என்.சிங் தலைமையில் நீர் மேலாண்மை திட்ட செயற்பொறியாளர் டாக்டர் கஜன் கார்க் மற்றும் அபிசேக் கவ்ரவ் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். பின்பு உபகோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல் சக்தி கேந்திரா மையத்தை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மாவட்டத்தில் நடைபெற்று முடிவுற்ற பணிகள் குறித்தும் மற்றும் அடுத்து இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடினர்.
தடுப்பணைகள்
இந்த ஆய்வுக்குப்பிறகு ஜி.என்.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீர் மேலாண்மை குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதார பணிகளான கழிவு நீர் குட்டைகள், பண்ணை குட்டைகள், மேற்கூைரயில் மழைநீர் சேகரிப்பு கூடம், அம்ரித் சரோவர் குளம் மற்றும் தடுப்பணைகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், ஆலத்தூர் ஒன்றியத்தில் ரூ.39.96 லட்சத்தில் 7 பணிகளும், பெரம்பலூர் ஒன்றியத்தில் ரூ.15.61 லட்சத்தில் 3 பணிகளும் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ.7 லட்சத்தில் ஒரு பணியும் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது.
முடிவடைந்த பணிகள் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருதையாறு வடிநில கோட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.