தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்
கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் முத்தையன், பொது செயலாளர் குப்புரங்கன், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், சம்மேளனத்தின் பொது செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பலன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும்.
ஊதிய ஒப்பந்த பலன் ஓய்வூதியவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஓய்வூதியம் மாற்றி அமைத்திட வேண்டும். ஓய்வூதியவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் தொற்று காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி பதவி உயர்வு, பணி உயர்வு தகுதி காலம் நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சம்மேளனத்தின் துணை பொது செயலாளர்கள் செல்வராஜ், நந்தாசிங், முருகராஜ், சுப்பிரமணி, பொருளாளர் நேருதுரை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மாதேஸ்வரன் உள்பட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.