பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுத்து தொழிலாளர்கள் நூதன வழிபாடு

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுக்கும் நூதன வழிபாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Update: 2023-08-16 20:00 GMT

ஊட்டி

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் மனு கொடுக்கும் நூதன வழிபாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச விலை

நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பளவில் மழை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நேற்று பிரதமர், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. மேலும் கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் 65,000 விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்றி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மாரியம்மனிடம் மனு

ஆனாலும் இதுவரை பசுந்தேயிலை விலை உயர்வு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பச்சை தேயிலைக்கு விலை உயர்வு வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் ஊட்டி, சிரியூர், மசினகுடி கோவில்களில் உள்ள மாரியம்மனுக்கு மனு கொடுக்கும் நூதன நிகழ்ச்சி மற்றும் வழிபாடு நேற்று நடந்தது.

இதில் நாக்குபெட்டா படுகர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் தொதநாடு நல சங்க தலைவர் பாபு, மேற்கு நாடு நல சங்க தலைவர் தாத்தன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளை திரட்டி போராட்டம்

இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிடும்போது இது கட்டுப்படி ஆகாதால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது. இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 ஆகிறது என்றும் அதிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடைசி கட்டமாக கடவுளிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு பின்னரும் தீர்வு ஏற்படவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் 65,000 விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்