நலத்திட்ட உதவிகளை பெற தேவையான விழிப்புணர்வு தொழிலாளர்களிடம் இல்லை

அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவிகளை பெற தேவையான விழிப்புணர்வுகள் தொழிலாளர்களிடம் இல்லை என்று மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

Update: 2023-01-07 19:04 GMT

சிவகாசி, 

அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவிகளை பெற தேவையான விழிப்புணர்வுகள் தொழிலாளர்களிடம் இல்லை என்று மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவு விழிப்புணர்வு முகாமை சிவகாசியில் நடத்தியது. அப்போது 63 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தான் வாரியம் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நலவாரியம்

இந்த திட்டங்கள் மூலம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளை பெற தேவையான விழிப்புணர்வு தொழிலாளர்களிடம் இல்லை. இதை போக்கத்தான் மாவட்ட சட்டபணிக்குழு ஆணையமும், தொழிலாளர் நல துறையும் இதுபோன்ற சிறப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி தொழிலாளர்களை நலவாரியத்தில் இணைத்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு இலவசமாக சேவைகளை செய்யவே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட உதவிகள்

இதன் தலைமை அலுவலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது. நீதிமன்றங்கள் உள்ள அனைத்து பகுதியிலும் வட்ட சட்டப்பணிகள் ஆணைகுழுக்கள் உள்ளது. இங்கு இலவசமாக உங்கள் சட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் அதில் உறுப்பினராக சேராமல் இருப்பவர்கள் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சிவகாசி பஸ் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் உள்பட பலர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், நீதிபதிகள் இருதய ராணி, முருகவேல், பாரதி, ராஜேஷ்கண்ணன், அமலநாத கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்