தொழிலாளர்கள் விவரங்களை தேசிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்- தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிலாளர்கள், தங்கள் விவரங்களை தேசிய இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்

Update: 2022-06-02 17:18 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிலாளர்கள், தங்கள் விவரங்களை தேசிய இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதளம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய. www.eshram.gov.in என்ற தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

எனவே கட்டுமானத்தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள். சிறுகுறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், காய்கறி-பழ-தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தச்சுவேலை செய்வோர். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள். கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், பேப்பர் விநியோகிப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள். பால்காரர்கள். துய்மை பணியாளர்கள். முன்கள பணியாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இதர நலத்திட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் இந்த இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடிப்படை விவரம்

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து உறுப்பினராக உள்ள தொழிலாளர்களும் இந்த தேசிய இணைய தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

பதிவு செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடை பி.எம்.எஸ்.பி.ஒய். என்ற திட்டத்தின் மூலம் பெறலாம். எனவே அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களை www.eshram.gov.in என்ற இணையதளத்தில், சுயமாகவோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள பொதுசேவை மையங்களின் மூலமாகவோ அல்லது சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு

அரசின் திட்டங்களை பெற இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேசிய இணைய தளத்தில் பதிவு செய்வதற்கு தொழிலாளர்களின் வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ. செலுத்தும் பணியாளராகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக்கூடாது. இதில் பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்