பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்
பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியிலும் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது. இந்த பணியில் நேற்று சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பள்ளத்தில் இருந்து மேலே ஏறி வரும்போது திடீரென மண் சரிந்தது. அதில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 10 அடி பள்ளத்தில் இறங்கி இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இருந்து அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளும், தெற்கு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.