சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

Update: 2022-07-25 19:54 GMT

கும்பகோணம்,

கும்பகோணம் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆடிப்பெருக்கு

தமிழகத்தில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள், புதுமண தம்பதிகள் உள்ளிட்டோர் காவிரி படித்துறைக்கு வந்து வாழை இலையில் பழங்கள், இனிப்பு, காப்பரிசி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபடுவர். பின்னர் மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். திருமணமான பெண்கள் தாலி கயிறு மாற்றியும், இளம் பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்தும் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரைக்கு வரும் சிறுவர், சிறுமிகள் சப்பரத்தில் சாமி படங்களை வைத்து அலங்கரித்து ஆற்றங்கரைக்கு இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு இழுத்து வருவது வழக்கம்.

சப்பரம் தயாரிக்கும் பணி

அதன்படி இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சப்பரம் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்காக தூங்கு மூஞ்சி நெட்டில் போன்ற மரங்களை வெட்டி சப்பரம் தயாரிப்பிற்கு பயன்படுத்துகிறோம். தற்போது விலைவாசி உயர்வு காரணமாக மரங்கள் மற்றும் ஆணி, தகரம் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கூடுதல் செலவு

பணியாளர்களின் கூலியும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சப்பரங்கள் தயாரிப்புக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. எனவே சப்பரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே ஓரளவு வருவாய் கிடைக்கும் என்கிற நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம். சாதாரணமாக ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படும் சப்பரங்கள் தற்போது ரூ.250 வரை விலை உயர வாய்ப்புள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்