விஷவாயு தாக்கி தொழிலாளி மயக்கம்
கருங்கல் அருகே கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தொழிலாளியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தொழிலாளியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனேந்திரன். இவர் தனது வீட்டின் பின்புறம் தூர்வாரப்படாமல் கிடந்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்ய முடிவு செய்தார். இதற்காக செல்லங்கோணம் புதுக்காடுவெட்டிவிளையை சேர்ந்த சுரேஷ்குமாரை கயிற்றின் மூலம் கிணறுக்குள் இறக்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் சுரேஷ்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கினார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுபற்றி குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் இருந்த சுரேஷ்குமாரை கயிறு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.