பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம், தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்தால் பிரபாகரனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தங்கமணி கண்டித்து, வீட்டில் தூங்குமாறு கூறியுள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து அருகே உள்ள வீட்டிற்கு சென்று பிரபாகரனின் தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தங்கமணி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் ஒயரில் தூக்கில் தூக்குப்போட்ட நிலையில் பிரபாகரன் தொங்கினார். இது குறித்த தகவலின்பேரில் அங்கு 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர், பிரபாகரனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.