ஓட்டலில் தொழிலாளி குத்திக்கொலை

மார்த்தாண்டத்தில் ஓட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சக ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-10 20:12 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டத்தில் ஓட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சக ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓட்டலில் வேலை

குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் தேரிவிளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டலில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை 3¾ மணிக்கு ஓட்டலில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வாடிக்கையாளர்கள் பலர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓட்டல் ஊழியர்கள் உணவு பொருட்களை பரிமாறி கொண்டிருந்தனர்.

குத்திக்கொலை

அந்த சமயத்தில் ராதாகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கணேசன் ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து திடீரென ராதாகிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதில் அவரது தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த சக ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே கணேசன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ராதாகிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த படுகொலை குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய கணேசனை தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். ஓட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்