லாரி மீது மொபட் மோதி கட்டிட தொழிலாளி பலி

மோகனூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மொபட் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-29 18:45 GMT

மோகனூர்

கட்டிட தொழிலாளி

மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட என்.புதுப்பட்டி குரும்பர் தெருவை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (23). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 27-ந் தேதி இந்திரகுமார் தனது மொபட்டில் வளையப்பட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இந்திரகுமாரின் மொபட் எதிர்பாராதவிதமாக பின்பக்கமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது மனைவி நிவேதா, மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

சிகிச்சை பலனின்றி பலி

இதன்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இந்திரகுமார் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்