வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-07-31 18:01 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 48). இவர் அப்பகுதியில் உள்ள அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று திருச்சி-சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். பின்னர் மீண்டும் பெரியவளையம் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம், பாலகிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அதைக்கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் பாலகிருஷ்ணனின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாலகிருஷ்ணனுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பாபு (35). இவர் வி.கைகாட்டி முட்டுவாஞ்சேரி சாலையில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனபால் மகன் சுப்பிரமணியன் என்பவர் திருச்சி-சிதம்பரம் அணுகு சாலையில் ஓட்டிவந்த மொபட், பாபு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாபுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்