அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
ஊட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.;
ஊட்டி,
ஊட்டி டம்ளர்முடக்கு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55), கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து ரமேஷ் புதுமந்து செல்லும் சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.