பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-07-27 19:12 GMT

சிவகாசி,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலியானார்.

வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த தவிட்டுராஜன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மாலை 3 மணிக்கு பணி முடியும் நேரத்தில் ஒரு அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

தொழிலாளி பலி

இதில் அந்த அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (47) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவருடன் பணியில் ஈடுபட்டு இருந்த வெம்பக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்த புவனேசுவரன் (33) என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பலத்த காயம் அடைந்த புவனேசுவரனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை பட்டாசு-தீப்பெட்டி தனி தாசில்தார் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்