கார் மோதி தொழிலாளி பலி; துக்கம் தாங்காமல் தந்தையும் சாவு
கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவரது இறுதி சடங்கில் தந்தையும் உயிரிழந்தார்.;
திருநின்றவூர் அடுத்த பாலவேடு காந்தி நகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 42). அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி இரவு திருநின்றவூரில் இருந்து பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அசோக்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அசோக்குமார் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவர் சங்கரன் (வயது 39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அசோக்குமார் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அசோக்குமாரின் உடலை கண்டு அவரது தந்தை குப்பன் (65) கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவரது இறுதி சடங்கில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.