தாறுமாறாக ஓடிய பஸ் மோதி தொழிலாளி பலி
கலவை அருகே தாறுமாறாக ஓடிய பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 55). இவர் இறைச்சி வாங்க கலவை கூட்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது செய்யாறில் இருந்து கலவை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் கம்பெனி பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது. பின்னர் சில வாகனங்கள் மீது மோதி, சாலையோரம் நின்று கொண்டிருந்த முனிரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் சம்பத் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.