ஏற்காடு:-
ஏற்காடு மலைப்பாதையில் தடுப்பு சுவரில் படுத்து தூங்கியபோது, 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார். 12 மணி நேரத்துக்கு பிறகு அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தொழிலாளி
சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர், இரவில் மலைப்பாதை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
இரவு 8 மணிக்கு மலைப்பாதையின் 40 அடி பாலம் அருகே வந்தபோது, அவருக்கு அசதி ஏற்பட்டது. இதனால் அவர் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சற்று இளைப்பாற எண்ணி தடுப்பு சுவரில் படுத்தார். அப்போது அவர் அயர்ந்து தூங்கினார்.
20 அடி பள்ளத்தில்...
சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தில் அவர் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். ஆனால் அவருடைய சத்தம் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு கேட்கவில்லை. இதனால் இரவு முழுவதும் ரமேஷ் வலியால் அலறியபடியே கிடந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஏற்காடு மலைப்பாதையில் வழக்கம் போல் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தில் இருந்து ரமேசின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம், ஏற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
12 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, 20 அடி பள்ளத்தில் கிடந்த ரமேசை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். செங்குத்தான பள்ளம் என்பதால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் அந்த பள்ளத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். பின்னர் வலியால் துடித்து கொண்டிருந்த அவரை, ஸ்ட்ரச்சரில் வைத்து கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர். காலை 8 மணிக்கு ரமேஷ் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பின்னர் அவர் ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி 12 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.