கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை;இரணியல் கோர்ட்டு தீர்ப்பு

திக்கணங்கோடு அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-02-23 19:13 GMT

திங்கள்சந்தை, 

திக்கணங்கோடு அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு

கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திக்கணங்கோடு மாங்கோடு கண்ணாடிவிளையை சேர்ந்தவர் ஆன்றோ நிகில்தாஸ், கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரும் நண்பர்கள்.

ஜான்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஜெயக்குமார், அவரது தம்பி செந்தில்குமார் (வயது48) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 11-9-2001 அன்று ஆன்றோ நிகில்தாஸ் மாங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் ஆன்றோ நிகில்தாசை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஆன்றோ நிகில்தாஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு இரணியல் உதவி அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்லப்பாண்டி நேற்று தீர்ப்பு அளித்தார். அதன்படி செந்தில்குமாருக்கு கொலை முயற்சி குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், வழி மறித்த குற்றத்திற்காக 1 வாரம் சிறைதண்டனையும் ரூ.100 அபராதமும் வழங்கப்பட்டது.

இதையடுத்து கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார். இதற்கிைடயே இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்