வைகை ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
பரமக்குடியில் உள்ள வைகை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
பரமக்குடி,
பரமக்குடி காந்தி காலனி அண்ணா நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 30). தொழிலாளி. இவர் தனது நண்பரான புரட்சி வீரனுடன் பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகே உள்ள உடைந்த தரைப்பாலம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய்க்கு திடீரென வலிப்பு நோய் வந்து தண்ணீருக்குள் மூழ்கி விட்டாராம். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் புரட்சி வீரன் செல்போன் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றுக்குள் இறங்கி விஜயை தேடினர். சிறிது நேரம் கழித்து தண்ணீருக்குள் மூழ்கி இறந்து கிடந்த விஜயை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.