சேலத்தில்தொழிலாளி மர்ம சாவுகொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில்தொழிலாளி மர்ம சாவுகொலையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலத்தில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
சேலம் கிச்சிப்பாளையம் குறிஞ்சி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேந்தவர் சாதிக் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அசினா. இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். சாதிக்குக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 3-ந் தேதி இவர் சாதிக் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசினா கோபத்தில் தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறிது நேரம் கழித்து குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தந்தை சாதிக், சேலையால் கழுத்து சுற்றப்பட்டு இறுக்கி கிடந்ததை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.
போலீசார் விசாரணை
குழந்தைகளின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் சாதிக்கை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சாதிக் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாதிக்கின் மனைவி அசினா போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த எனது கணவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். இதற்கு நான் பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தியில் சேலையால் அவரே கழுத்தை இறுக்கி இறந்துள்ளார் என்று கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை
சாதிக் இறப்பு குறித்து போலீசார் கூறும் போது, தொழிலாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவர் குடிப்பதற்காக பணம் கேட்டு மனைவி மற்றும் தாயிடம் தொந்தரவு கொடுத்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த சாதிக் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் சேலையால் கழுத்தை சுற்றி இறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்றனர். தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.