ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் இயேசு மகன் குமார் (வயது 30). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர் உப்பளங்கள் மற்றும் உப்பு கிட்டங்கிகளில் உப்பு பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை தூத்துக்குடியில் இருந்து பழையகாயல் ரட்சன்யபுரத்தில் உள்ள ஒரு தனியார் உப்பு கிட்டங்கியில் பாக்கெட் போடும் வேலைக்காக சென்றுள்ளார். மாலை 4 மணியளவில் உப்பு பாக்கெட் போட்டு கொண்டு இருந்தார். அப்போது பாக்கெட் ஒட்டுவதற்கான மின்சார போர்டில் பிளக்கை சொருகிய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.