ஜலகண்டாபுரம் அருகே கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஜலகண்டாபுரம் அருகே கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-11 21:13 GMT

மேச்சேரி, அ

மின்சாரம் தாக்கி பலி

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே பனிக்கனூரில் கோழி பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் கோழி பாரம் ஏற்றுவதற்காக நேற்று காலை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் டெம்போவில் வந்தார். பின்னர் டெம்போவில் கோழி ஏற்றும் பணியில் ஜெகதீஸ் மற்றும் வாழப்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 47) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

டெம்போவின் மேல் பகுதியில் கயிறு போடுவதற்காக அதன் மீது ஜெகதீஸ் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின்சார கம்பி அவருடைய தலை மீது உரசியது. இதில் கீழே நின்றுக்கொண்டு டெம்போவை பிடித்து கொண்டிருந்த விஜயகுமார் மீதும் மின்சாரம் தாக்கியது. அப்போது அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். ஜெகதீஸ் லேசான காயத்துடன் தப்பினார்.

போராட்டம்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜலகண்டாபுரம் போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க கோரி அங்கு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்