4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி அருகே 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் ஆத்தூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரவி என்பவர் மூலம் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் கட்டும் வீட்டின் கட்டிடங்களுக்கு சீலிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், 4-வது மாடியில் மாதையன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவருக்கு வாந்தி வந்துள்ளது. இதனால் அவர், மாடியிலிருந்து குனிந்து கீழே வாந்தி எடுக்கும்போது, தவறி கீழே விழுந்து இறந்து விட்டார்.
இதுகுறித்து மாதையன் மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.